

சென்னை: தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்தார். அரசு ஐடிஐகளில் பணியாற்றும் 136 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு, உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதன்பின் அமைச்சர் பர்வேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இத்துறையில் இதுவரை இல்லாத வகையில் 136 பயிற்றுநர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் முதல்முறையாக கணினிவழி கலந்தாய்வு மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் எந்தத் தொழிற்சாலையாக இருந்தாலும், தொழிலாளர்களின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமோனியா கசிவு தொடர்பாக 21 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் விதிகளை மீறிய 28 ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எந்தவொரு தொழிற்சாலையிலும் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அனுமதி இல்லை. இதை கண்காணிக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வுகளில் சுமார் 70 குழந்தைத் தொழிலாளர்களும், 150 கொத்தடிமைகளும் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் விவரங்களைச் சேகரிக்க பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டு, இதுவரை 13.4 லட்சம் தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை அணுகி மீதமுள்ளவர்களையும் பதிவுசெய்ய அறிவுறுத்தி வருகிறோம். வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.