

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தனது உரையில்,‘கட்சி நிதி’ என சொன்ன உடனே, பயத்தில் திமுகவினர் எழுந்து நின்று முதல்வரை பேச விடாமல், தடுக்க முயன்றனர்.
அதன்பிறகு, திருடனுக்கு தேள் கொட்டியது போல, உள்ளே இருக்க முடியாமல், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பள்ளிக்கல்வித் துறையில் ரூ.400 கோடி கட்சி நிதி தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக நிச்சயம் வழக்கு தொடுக்கப்படும்.
மின்சாரத் துறைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களுக்கு 24-ம் தேதி (இன்று) காலை பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குகிறார். 25-ம் தேதி மின்சாரத் துறை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம்.
முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. எப்போதும் பாஜக, அவர்களுக்கு ஆதாயமில்லாமல் ஒருகோப்பை நிறுத்தி வைக்காது. ஏதோ உத்திரவாதம் திமுக கொடுத்திருக்கிறது என்றார்.