சென்னை: ‘சிறை தண்டனையை எதிர்த்து தொடரப்படும் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் பரோல் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம்’ என தமிழக அரசுக்கு 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் விதிக்கப்படும் தண்டனையை எதிர்த்து தொடரப்படும் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின.
அதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் விதமாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, எம். நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஏதேனும் மாற்று கருத்துகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வண்ணம் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் நியமி்க்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞரான அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ‘‘இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருவதாகவும், தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக நாடு தழுவிய அளவில் கொள்கையை வகுப்பது குறித்து உச்ச நீதிமன்றமும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை் காரணம் காட்டி பரோல் அல்லது விடுப்பு போன்ற சலுகைகளை காலவரம்பின்றி நிறுத்த முடியாது.
மேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும், பரோல் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை உயர்நீதிமன்ற பதிவுத்துறை விசாரணைக்கு பட்டியலிடலாம்.
அதே போல, சிறைத்துறை அதிகாரிகளும் பரோல் கோரும் விண்ணப்பங்களை விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கலாம். இந்த உத்தரவு குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.