மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு அமைச்சர் நிர்மல் குமார் ஏகபோக ‘ஆதரவு’ - அரசு அலுவலர்கள் கலக்கம்

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் அமைச்சர் நிர்மல்குமார்

படம்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

மதுரை: ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் இரட்டை குழல் துப்பாக்கிபோல் அமைச்சர் நிர்மல் குமாரும், எம்.பி சு.வெங்கடேசனும் ஒன்றாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்கள். அமைச்சர் நிர்மல் குமார், எம்.பி சு.வெங்கடேசனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால் மதுரை ஆய்வுக் கூட்டங்கள் முதல் நிர்வாகம் வரை அரசு அலுவலர்கள் வரை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள். 

தென் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் தான் தவெக-வுக்கு 8 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் குமாருக்கு மட்டுமே அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர திமுக கூட்டணியில் இருந்து மேலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று தேர்தலுக்கு பின்னர் தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வான விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் சாதாரண நடிகராக இருந்து ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தது முதல் அவரது மக்கள் இயக்கம் வரை மதுரை மாவட்டத்தில் அவரது ரசிகராக, மக்கள் இயக்க உறுப்பினராக பணியாற்றி தற்போது எம்எல்ஏ- ஆன தங்கபாண்டியன், கல்லாணை, கோபிசன், மா.விஜய் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அதிருப்தியை வெளிகாட்டிக் கொள்ளாமல் எம்எல்ஏ ஆன திருப்பதியில் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததின் பின்னணியில் அமைச்சர் நிர்மல் குமாரின் அரசியல் இருப்பதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர். அதனால், அமைச்சர் நிர்மல் குமாருக்கும், மதுரை மாவட்ட மாவட்டச் செயலாளர்களான தவெக எம்எல்ஏ-க்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது. அமைச்சர் நிர்மல் குமார், ஆய்வுக் கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் எம்பி சு.வெங்கடேசனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், தவெக எம்எல்ஏ-க்களுக்கு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  

இந்நிலையில் ஆய்வுக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் நிர்மல் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், தவெக கட்சியை தாண்டி அரசு அலுவலர்கள் வரை நெருக்குடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு நிலத்திட்ட நிகழ்ச்சி, அதற்கு பிறகு கடந்த 3-ம் தேதி நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றம் கண்காணிப்பு குழு கூட்டம் போன்றவற்றில் அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையிலே எம்பி சு.வெங்கடசேன் அதிகாரிகளையும், அலுவலர்களையும் கடிந்து கொண்டும், கடுமையாகவும் பேசினார். 

கடந்த காலத்தில் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் இதுபோல் ஆளும் கட்சி அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி மற்றும் பிற கட்சி மக்கள் பிரதிநிதிகளை, மாவட்ட அதிகாரிகளை கையாளவும், தலையிடவும் விடமாட்டார்கள். அதனால், கடந்த திமுக ஆட்சியில் சு.வெங்கடேசன் எம்பி, திமுகவினரை மீறி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலகங்களில் தலையிட முடியவில்லை.

அதிகாரிகளும் ஆளும்கட்சியினரை தாண்டி மற்ற கட்சியினர் நெருக்கடியின்றி தங்கள் பணியை மேற்கொண்டனர். ஆனால் தற்போது அமைச்சர் நிர்மல் குமார், ஆய்வுக் கூட்டங்களில், அமைச்சர் நிர்மல் குமார், ‘அண்ணன் சு.வெங்கடேசன் சொன்னது மாதிரி’ என்று அவரையே முக்கியத்துவம் கொடுத்து பேசவிட்டும், அவரது எண்ணத்தையே அதி்காரிகளிடம் பிரதிபலித்திருக்கிறார்.

ஆனால், அதே நிர்மல் குமார், மண்டல அலுவலங்கள் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை தவெக எம்எல்ஏ-க்கள் தலையீட்டை விரும்புவதில்லை. அதனால், நிர்மல் குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் விவகாரங்களி்ல் எம்பி சு.வெங்கடேசன் தலையிடுவதை கண்டு கொள்வதில்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக் கூட்டங்களுக்கு அமைச்சர் நிர்மல்குமாரும், சு.வெங்கடேசனும் ஒரே நேரத்தில் காரில் வந்து இறங்குகின்றனர். ஆனால், தவெக எம்எல்ஏ-க்கள் தனித்தனியாக வருகின்றனர். அவர்கள் அமைச்சருடன் வருவதில்லை.

மேலும், சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்துதும், மாவட்ட மாவட்ட நிர்வாகம், அரசியலை சு.வெங்கடேசனிடம் விவாதித்த பிறகும், அவரது வழிகாட்டுதல் படியுமே நிர்மல் குமார் செயல்படுகிறார். அதனால், அமைச்சர் நிர்மல் குமாருக்கு கொடுக்கும் மரியாதையை அதிகாரிகள் தற்போது எம்பி.சு.வெங்கடேசனுக்கு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சு.வெங்கடேசன் சொல்வதை அமைச்சர் நிர்மல் குமார் கேட்பதால் மாவட்ட அதிகாரிகள், கீழ்நிலை அலுவலர்கள், ஆளும் கட்சி அமைச்சர், எம்எல்ஏ-க்கள் பேச்சை கேட்பதா, எம்.பி பேச்சை கேட்பதாக என குழப்பமடைந்துள்ளனர், ’’ என்றனர். 

<div class="paragraphs"><p>மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் அமைச்சர் நிர்மல்குமார்</p></div>
Kaathal: The Core - இணையரை ரட்சித்து மீண்ட ‘மீட்பர்’ ஓமனா | திரை தேவதைகள் 25

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in