

சென்னை: ‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் முக்கிய முடிவுகளை முதல்வர் விஜய் ஒருவாரத்தில் அறிவிப்பார்’ என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கோடைகாலத்தில் ஏசி பயன்பாடு அதிகரிப்பதால் மின்கட்டணம் 2, 3 மடங்காக உயர்வது வழக்கம்தான். கடந்த ஆண்டு 11.50 லட்சம் பேருக்கு இவ்வாறுகட்டணம் உயர்ந்தது.
ஆனால், இந்த ஆண்டு 9.60 லட்சம் பேருக்கு மட்டுமே கட்டணம் உயர்ந்துள்ளது. இதில் கட்டண மாறுபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்ட 3.70 லட்சம் இணைப்புகளுக்கு மின்வாரியமே சுயமாக தற்போது மறுமதிப்பீடு செய்து வருகிறது. பிழைகள் இருந்தால் அங்கேயே சரிசெய்வர்.
மின்கட்டண காலநீட்டிப்பு இல்லை அதேநேரம், மறுமதிப்பீடு நடப்பதால் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படாது. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3.70 லட்சம் பேர் புகார் அளித்துள்ளதாகக் கூறி, கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். வாட்ஸ்அப்பில் வந்த தவறான தகவலை நம்பி பொதுமக்களைக் குழப்பும் விதமாகப் பேசி வருகிறார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு தற்போது அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் அல்லது மத்திய அரசு மூலமாகத்தான் தீர்வு காண முடியும். அதைவிடுத்து, தமிழக மக்களுக்கு எதிராக மக்களைக் குழப்பும் வகையில் அதிமுக செயல்படுவது ஏன் என தெரியவில்லை.
கர்நாடகா கடந்த 100 ஆண்டுகளாகவே தமிழகத்துக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்ற அரசியலைத்தான் செய்து வருகிறது. முதல்வர் விஜய், கர்நாடகா செல்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முதல்வர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
உச்ச நீதிமன்றத்தை நாடுவது, மீண்டும் நடுவர் மன்றம் அமைப்பது, மாநிலங்களுக்கு இடையே சுமுகப் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என 4 வழிகள் நம்மிடம் உள்ளன. இதில் எந்த வழியைப் பின்பற்றுவது என்பது குறித்து முதல்வர் விஜய் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.