அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு: ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு: ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
Updated on
2 min read

சென்னை: “தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் சரத் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். அதை சரிபார்த்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் இருக்கும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன், தங்கள் குடும்பங்களையும், சொத்துகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்தனர்.

அதற்கு பாஜக மறைமுகமாக உதவியதாக நாங்கள் தொடர்ந்து கூறினோம். இதைத்தான் தற்போது ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் வெளிப்படையாக ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதனால்தான் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறின.

அதேபோல், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ‘தீய சக்தி’ என்று கடுமையாக எதிர்த்த திமுகவுடன் கூட்டணி சேர பழனிசாமி தயாரானதால், அதை ஏற்க முடியாமல் அங்கிருந்து எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் பலர் வெளியேறி வருகின்றனர். இன்னும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை ஸ்டாலின், உதயநிதி, பழனிசாமி மற்றும் அவரது மகன் ஆகியோர் சில தொழிலதிபர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். திமுகவிலும் மூத்த தலைவர்கள், எம்எல்ஏ.க்கள் பலரும் இதற்கு உடன்படாமல் வருத்தத்தில் உள்ளனர். இதனால் திமுகவில் இருந்தும் பலர் வெளியேற வாய்ப்புள்ளது. தமிழக மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக ஆளுநர் அர்லேகரை அலுவல் ரீதியாக சந்தித்து பேசினோம். துணைவேந்தர் நியமனம் குறித்த கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் முடிவெடுக்க வேண்டியது அவரின் பணியாகும். இதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் ஆளுநர் தான் விளக்க வேண்டும்” என்றார்.

தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் டி.சரத்​கு​மார், போதைப்​பொருள் பயன்​படுத்​தி​யது போன்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி பெரும் சர்ச்​சை​யானது குறித்து அவர் கூறும்போது, “அமைச்சர் சரத்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதை சரிபார்த்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் இருக்கும்” என்றார்.

மேலும், “தற்போது தவெக கூட்டணிக்கு 120 எம்எல்ஏ.க்களின் முழு ஆதரவு இருக்கிறது. தமிழகத்தில் இதுவே முதல் கூட்டணி ஆட்சி. அதிமுக, திமுக தலைவர்கள் தங்கள் குடும்ப சொத்துகளை காப்பாற்றவே ரகசிய கூட்டணி அமைக்கின்றனர். ஆனால், அடுத்தகட்ட தலைவர்கள் மக்களை சந்திக்க வேண்டும்.

அதை எதிர்கொள்ள முடியாமல்தான் இன்றைக்கு பலர் வெளியேறுகின்றனர். இன்னும் பல ஆயிரம் கோடி பணத்தை வைத்து குதிரை பேரத்தின் மூலமாக ஆட்சியமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தவெக தலைமையிலான புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

மக்கள் தீர்ப்புக்கு எதிராக திமுக செயல்படுவதாலேயே கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வெளியேறுகின்றன. நேர்மையாக அரசியல் செய்யும் யாரும் திமுகவுடன் பயணிக்க விரும்பமாட்டார்கள். 2004-ம் ஆண்டே மத்திய அமைச்சரவையில் மதிமுக கட்சிக்கான அமைச்சர் பதவியை திமுகதான் பேரம் பேசி வாங்கிக்கொண்டது. அப்போதே பதவியை பெரிதாக எண்ணாத வைகோ, தற்போது மக்கள் தீர்ப்பை மதித்தே வெளியேறியுள்ளார்.

இன்னும் 2 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சியை ஒட்டுமொத்தமாக பாஜகவுடன் இணைத்துவிட்டு, குடும்பத்துக்கு ஓர் அமைச்சர் பதவியை வாங்கிக் கொண்டு போனாலும் ஆச்சரியமில்லை” என்று அவர் கூறினார்.

அமைச்சர் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு: ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
“ராமர் கோயில் காணிக்கை திருட்டில் ஈடுபட்டோரை தப்பவிடக் கூடாது” - மாயாவதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in