“முதல்வர் விஜய் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவுக்கு பயம் ஏன்?” - அமைச்சர் நிர்மல் குமார்

“முதல்வர் விஜய் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவுக்கு பயம் ஏன்?” - அமைச்சர் நிர்மல் குமார்
Updated on
1 min read

சென்னை: “முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் உரை தொடங்கியுடன் அவர், ‘பார்ட்டி ஃபண்ட்’ என சொன்னவுடன், திமுகவுக்கு என்ன பயம் எனத் தெரியவில்லை. பேரவையில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தனது அறையில் அமர்ந்து, முதல்வரின் உரையை கேட்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருக்கு என் நன்றி. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. எனக்கு ஒரு பாணி, கருணாநிதிக்கு ஒரு பாணி என அனைவருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. அப்போதும், எம்ஜிஆரை இப்படித்தான் பேசினார்கள். அதே டெக்னிக்கை தான் இப்போதும் பின்பற்றுகிறார்கள். இதை அவர்கள் மாற்றப் போவதில்லை.

கடந்த ஆட்சியில் பணம் இல்லாமல், டிரான்ஸ்ஃபர் நடக்கவில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. திமுக ஆட்சியில் சாமானிய, ஏழை, எளிய மக்கள் சட்டப்பேரவைக்குள் வந்தது இல்லை; புரோக்கர்கள் மட்டுமே வந்தனர். ஆனால், இப்போது, ஒவ்வொரு அமைச்சரையும் சாதாரண ஏழை, எளிய மக்கள் சந்திக்கின்றனர். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு துறைக்கும் பி.ஏ.க்களை நியமித்து வசூல் செய்யும் வேலையைதான் அவர்கள் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் அவர்கள், தற்போது அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை உச்சத்தில் இருப்பதால், தற்போது சந்திப்பு நடந்தால் நன்றாக இருக்காது என சொல்லிவிட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக போன் கிடையாது. அவரை சுற்றியிருக்கும் மூன்று, நான்கு பேருக்குதான் தொடர்பு கொள்ள வேண்டும். அதனால் அவர்களை தொடர்பு கொண்டுதான் பேசினோம். இதனால், அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர்களை சந்திக்கலாம் என நினைத்தோம். அந்தச் சந்திப்பு மரியாதை நிமிர்த்தமாக தான் நடந்தது. அவர்களை வைத்து வாக்கேடுப்பில் நாங்கள் வெற்றிபெற்றோமா?

நான் முதல்வன் திட்டத்தை யாரும் முடக்கவில்லை. ஒவ்வொரு திட்டத்தின் பெயரும் அதன், செயல்பாடு சார்ந்து இருக்க வேண்டும். அந்தப் பெயரில் பல்வேறு குழப்பம் இருக்கிறது.

பார்ட்டி ஃபண்ட் உங்கள் கட்சியில் இல்லையா? 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பிடிஆரிடம் கேளுங்கள். இது பார்ட்டி ஃபண்டா இல்லையா எனக் கேளுங்கள். இது குறித்து விசாரணை நடத்தலாமா வேண்டாமா எனக் கேளுங்கள்.

சட்டம் - ஒழுங்கு குறித்து தெளிவாக முதல்வர் சொல்லிவிட்டார். எங்கள் உறுப்பினர்கள் பேரவைக்குள் அமைதியாகவே இருந்தனர். அவர்கள்தான் கத்திக் கொண்டிருந்தனர். தற்போது பார்ட்டி ஃபண்ட் ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

“முதல்வர் விஜய் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவுக்கு பயம் ஏன்?” - அமைச்சர் நிர்மல் குமார்
தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு - சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in