

படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: ‘புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். மின்துறை தனியார்மய பிரச்சினைக்கு இனி இடமில்லை’ என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்தனர். இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியது: “மின்தடையை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் மின்தடை சரி செய்யப்படும்.
சுற்றுலா பயணிகள் வருகையால் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையின் அகலங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே நிலையில் இருக்கின்றன. போக்குவரத்து காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றம் போக்கவரத்து துறையோடு இணைந்து சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிராமப்புறங்களில் கால்நடைகளை வளர்ப்பு, பராமரிப்பதற்கான செலவுகளை கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் வருவாயை பெருக்குவதோடு மட்டுமல்லாம பால் உற்பத்தியையும் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனது துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு அளிப்பது, இடமாற்றம் செய்து உள்ளிட்ட பணிகளை வெகுவிரைவில் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
2021-ல் பல திட்டங்களை செய்ததன் விளைவாக 2026-ல் ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2.0’ என்று சொல்லும் அளவுக்கு மீண்டும் வந்துள்ளது. எதிர்காலத்திலும் இந்த அரசு செய்யும் என்ற நம்பிக்கையோடும் மக்கள் வாக்களித்துள்ளர்கள். இந்த நம்பிக்கையை இந்த அரசு பூர்த்தி செய்யும்.
அனைத்து அமைச்சர்களும் அனுபவம்மிக்கவர்கள். மக்களோடு மக்களாக நிற்பவர்கள். யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அந்த துறைகளில் உள்ள கோரிக்கையை நிவர்த்தி செய்து தருவதற்கு அமைச்சர்களாக தயாராக இருக்கிறோம்.
இந்த அரசு முழு மனதோடு பாராபட்சமின்றி அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தரும். சட்டப்பேரவையில் பேச தவறிய கோரிக்கைகளையும் எங்களிடம் தெரிவித்தால், அதையும் சரி செய்து தர தயாராக உள்ளோம். இந்த அரசுக்கு எப்போதும் போல் எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
என்னுடைய துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி கோப்பை அனுப்ப சொல்லியுள்ளோம். இதுகுறித்து ஆளுநர், முதல்வரிடம் கலந்து கொண்டு பேசி 280 ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்துறையில் நிறைய காலி பணியிடங்கள் இருந்தன. தனியார்மயம் காரணமாக, காலி பணியிடங்களை நிரப்ப அப்போது, இரு அதிகாரிகள் ஒப்புதல் கொடுக்கவில்லை. பிறகு, நானும், முதல்வரும் கலந்து கொண்டு இளநிலை பொறியாளர், கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்பி உள்ளோம்.
நிறைய பேருக்கு பதவி கொடுத்துள்ளோம். மின்துறையில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை இந்தாண்டு நிரப்பப்படும். மேலும், மின்துறை தனியார்மய பிரச்சினைக்கு இனி இடமில்லை.
புதுச்சேரிக்கு உயர் நீதிமன்றத்தின் கிளையை கொண்டு வர ஆலோசித்து வருகிறோம். வெகுவிரைவில் கொண்டு வரப்படும். அதன்பிறகு, உச்ச நீதிமன்றம் கிளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.