

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழை தொடர்பாக, கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் மற்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கடையநல்லூர் எம்எல்ஏ டி.எம்.ராஜேந்திரன் பேசும்போது, “நிதியமைச்சரின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது. தமிழில் பல சொற்றொடர்களை அவர் பேசவில்லை, சில சொற்கள் இலக்கணப் பிழையாக இருந்தது.
இதைக் குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ பார்க்கவில்லை. பள்ளி, கல்வித் துறை அமைச்சர் தன் கட்சிக்காக கடுமையாக வாதிடுகிறார். வருங்காலத்தில் நிதியமைச்சருக்கு பிழையின்றி பட்ஜெட் வாசிக்கும் வாய்ப்பு இருக்குமானால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “25 - 30 ஆண்டுகளாக கல்வித் துறையில் இருந்திருக்கிறேன். அப்போது என் தொடர்புகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. சிறிது நாட்களாகவோ பார்க்கிறேன்... உருவ கேலி, சாதி, பெண்கள் குறித்து கேலி செய்வது போன்றவற்றை தொடர்ந்து தற்போது மொழி குறித்து கேலி பேச வந்துவிட்டார்கள்.
எனக்கு ஒரு மொழியை கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பு மொழி. அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது. நான் பைபிள் படித்திருக்கிறேன். பிறப்பால் கிறிஸ்தவன். நான் இப்படித்தான் பேசுவேன். நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது.
என் ஸ்டைல் இதுதான். கேலி செய்கிறீர்களா?” என்று ஆவேசமாக பேசினார்.
இதற்கிடையே சபாநாயகர் குறுக்கிட்டு, “நிதியமைச்சர் மக்களுக்கு புரியும் மொழியில்தான் பேசுகிறார். இதை இத்துடன் விட்டுவிடலாம்” என்று சமாதானம் செய்தார்.