அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சித்த பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏமாற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: “சித்த பல்கலைக்கழகம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு அனுப்பிய சித்த பல்கலைக்கழகம் மசோதாவை இருப்பிலேயே வைத்திருந்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. ஆளுநரின் ஒப்புதல் என்பது இரண்டாவது முறையாக ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்கள் வருத்தப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வாகும்” என்றார்.
பின்னணி என்ன?: தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகம் அமைப்பதற்காக தமிழக அரசு 20 ஏக்கர் நிலத்தையும் மாதவரம் அருகில் ஒதுக்கியது.
ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து மசோதா தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. அதற்கு, அரசு சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன்பின்னரும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர், கடந்த ஆண்டு மசோதாவை திருப்பியனுப்பினார். இதையடுத்து, கடந்த அக்.16-ம் தேதி சட்டப்பேரவையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீ்ண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
அத்துடன், மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துகளை ஏற்க மறுத்து பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
