

அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு பின்னடைவை சந்தித்துள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 9,105 வாக்குகளும், திமுகவின் கே.என்.நேரு 8,523 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 864 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன.