“சுஸ்லான் நிறுவனம் ஆந்திராவுக்கு செல்லவில்லை” - பேரவையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா

Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள சுஸ்லான் நிறுவனம், ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாக பரவும் தகவல் தவறானது” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசியது: “கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற்ற வெற்றி தமிழகம் முதலீட்டாளர் மாநாட்டில் சுஸ்லான் (Suzlon) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்ய சென்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

உண்மையில், சுஸ்லான் நிறுவனம் 2006-ம் ஆண்டிலேயே கோவையில் காற்றாலை பாகங்கள் உற்பத்தியைத் தொடங்கியது. அதன்பின் 2011 முதல் 2020-ம் ஆண்டு வரையான காலங்களில் சில உற்பத்திகளை அந்நிறுவனம் குறைத்துக்கொண்டது.

தமிழக அரசின் தொடர்ச்சியான முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளின் விளைவாக சுஸ்லான் நிறுவனம் தற்போது நமது மாநிலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் விரிவுபடுத்த முன்வந்துள்ளது.

முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி கோவையில் கண்ட்ரோல் பேனல்களும், தூத்துக்குடியில் விண்ட் பிளேடுகளும் உற்பத்தியாக உள்ளன.

அதேநேரம் ஆந்திராவில் சுஸ்லான் நிறுவனம் மேற்கொள்வதாகக் கூறப்படும் ரூ.10,500 கோடி முதலீடு என்பது காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கானது. அதை தமிழகத்தில் அமைய உள்ள இயந்திர பாகங்கள் உற்பத்திக்கான ஒப்பந்தத்துடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.

தமிழகத்திலும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, 9 ஆண்டுகளுக்கு முன்புபோன நிறுவனம், தற்போது மீண்டும் தமிழகத்துக்கு வந்துள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை குறித்து நான் கடந்த முறை பேசிய வார்த்தைகள் எதிர்க்கட்சிகளால் திரிக்கப்பட்டு அரசியலாக்கப்படுகிறது. பவுண்டேஷன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் சின்னப்பிள்ளை. அவரது மகத்தான சேவையைப் பாராட்டியே முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார். சின்னப்பிள்ளையின் உந்துதலால், மதுரையில் உள்ள 'ஹை டெக் அராய்' (Hi-Tech Arai) என்ற ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கு தேவையான 'ஓ-ரிங்' ரப்பர் பாகங்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்து தருகின்றனர். இதன் மூலம் சுமார் 200 பெண்கள் வரை வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இது தவிர தொழிற்சாலைகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களையும் இணைத்து, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் புதிய திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதைத்தான் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் வார்த்தை ஜாலங்கள் மூலம் அரசியல் செய்கின்றன. எங்களுக்குப் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றம் மட்டுமே முக்கியம்” என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா</p></div>
சட்டப்பேரவை நேரலையில் மாற்றம் செய்ய திட்டம்: ஜேசிடி பிரபாகர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in