“முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதா?” - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

Updated on
2 min read

சிவகாசி: “முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது என கூறுபவர்களுக்கு தக்க தருணத்தில், எப்போது ஆந்திராவுக்கு சென்றது என ஆதாரத்துடன் தெரிவிப்பேன். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, பண்ணையார் தனத்தை விட்டு விட வேண்டும்” என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 30 நாட்களில் பல்வேறு நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்று விட்டது என கூறுபவர்களுக்கு தக்க தருணத்தில், எப்போது ஆந்திராவுக்கு சென்றது என ஆதாரத்துடன் தெரிவிப்பேன். சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தொழில் முதலீடுகள் ஆந்திரா சென்றுள்ளது. அதற்கான ஆதாரம், எதற்காக, எப்போது வெளியே சென்றார்கள் என்ற விவரம் தயாராக உள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி கேட்க சொல்லுங்கள். பதிலளிக்க தயாராக உள்ளேன்.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, பண்ணையார் தனத்தை விட்டு விட வேண்டும். டி.ஆர்.பி.ராஜா இன்னமும் தொழில் துறை அமைச்சராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கும், மக்களுக்கும் மரியாதை கொடுங்கள். நிதி ஆயோக் கூட்டத்தில் 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடையும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதற்கான தொலை நோக்கு திட்டம் தாயரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

திமுக அரசு வாங்கிய கடனை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தி இருந்தால் ரொம்ப நல்லது. அதனால் மக்கள் பலனடைந்தார்களா என்பதுதான் கேள்வி. கரோனா காலம் என கூறி சமாளிக்கின்றனர். இதே காலத்தை கடந்து வந்த மகாராஷ்டிரா, குஜராத் மாநிலம் வளர்ச்சியை எடுத்து பார்க்க வேண்டும்.

30 நாட்களிலேயே ஏமாற்றம் என கூறுகின்றனர். 5 ஆண்டுகளாக நீங்கள் ஏமாற்றியதால்தான் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு ஏதாவது செய்துவிடலாமா என முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் கல்யாண வீடுகளுக்கு சென்று கத்திக் கொண்டிருங்கள்.

மகளிர் உரிமைத் தொகையை ஆட்சிக்கு வந்த பல மாதங்களுக்கு பின்னர் தான் வழங்கினார்கள். இப்போது 30 நாட்களிலேயே எங்களிடம் கேட்கிறீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

நாளை (ஞாயிறு) நடைபெறும் பொதுக்குழுவில் பெரிய சர்ப்ரைஸ் உள்ளது. யார் யாரெல்லாம் கட்சியில் சேர போகிறார்கள் எனப் பாருங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 30 பட்டாசு ஆலைகளுக்கு மட்டுமே உற்பத்தி அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த 30 நாட்களில் 14 ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் ஏதும் இன்றி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் கீர்த்தனா </p></div>
வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in