

தஞ்சாவூர்: தமிழகத்தில் எந்த அதிகாரியையும் மாற்றாமல், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் மாற்றுகிறீர்கள் என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டதால் தான், தமிழக தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று (மார்ச் 10) முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரவுள்ளதால், தஞ்சாவூர் திலகர் திடலில் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.என். நேரு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2021 தேர்தலில் டெல்டாவில் உள்ள 41 தொகுதிகளில் 4 தொகுதிகளை தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
தவெக தலைவர் விஜய் எவ்வளவு வாக்கு வாங்குவார் என எனக்கு தெரியாது. அவர் எந்த வாக்கை பிரித்தாலும், திமுக வெற்றி பெறுவது உறுதி. பழனிசாமிக்கு பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாததால், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகாரிகளை மாற்றுகிறீர்கள், தமிழகத்தில் ஏன் எந்த அதிகாரியையும்மாற்றுவது இல்லை என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டதால்தான், தமிழக தலைமைச் செயலாளரைமாற்றி உள்ளனர்.
தேர்தல் முடிந்ததும் அவர்கள் திரும்பி வரப் போகிறார்கள். அதிமுக, பாஜவுடன் தவெக தலைவர் விஜய் மறைமுகத் தொடர்பில் உள்ளார். திமுக மட்டும்தான் அவருக்கு எதிரி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.