

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை, சமூகநலத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தி நேற்று ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகள், கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
இதனிடையே, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, அமைந்தகரையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செனாய் நகர், சுப்பராயன் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு முதல் நாளாக வருகை தந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், அவர்களுடன் கலந்துரையாடி, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை மாணவர்களுக்கு வழங்கி அதன் தரத்தை ஆய்வு செய்வதற்காக, அவரும் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினார்.
தொடர்ந்து, காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகளை தரமாகவும், சுவையாகவும், சுத்தமாகவும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம், எடை, பாதுகாப்பாக இருப்பு வைத்தல் குறித்து ஆய்வு செய்து, இருப்பு பதிவேடுகளை ஒப்பிட்டு பார்த்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார்.
ஆய்வுகளின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் எம்.மரியம் பல்லவி பல்தேவ், இயக்குநர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.