

சென்னை: “தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவமனைகள் உட்பட பல அலுவலகங்களில் காலிப் பணியிடங்களே இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் முழு பூசணிக்காயை தட்டுச் சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல் பொய் சொல்லி இருக்கிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் இல்லையென்று, அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் ஏழை, எளிய மக்கள் புலம்புகின்றனர். தங்களின் விளம்பரங்கள் மூலமும், வாய் ஜாலங்கள் மூலமும், அப்பாவி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் மனப்பால் குடித்துக்கொண்டு அலைகிறார்கள்.
தமிழக சுகாதாரத் துறையில் போதிய மருத்துவர்கள் இல்லாமலும், பல மருத்துவப் பணியிடங்கள் காலியாகவும் இருப்பது குறித்த நிகழ்வுகளில் ஒருசில- காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளது.
பொது சுகாதாரத் துறையில் 3500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. A.N.M முடித்தவர்கள் பலபேர் இருக்கும் நிலையில் இவர்களைக் கொண்டு இப்பணியிடங்களை திமுக அரசு இதுவரை நிரப்பவில்லை. இதனால், டெங்கு, கொசு ஒழிப்பு பணிகள், முத்துலட்சுமி ரெட்டி உதவித் திட்டம், தடுப்பூசித் திட்டம் போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, மருத்துவ மேல்படிப்பு படிக்கும் PG மருத்துவர்கள் கட்டாயமாக 2 வருட ஒப்பந்தத்தில் பணிபுரிய வேண்டும். இவ்வாறு 2 வருட ஒப்பந்தத்தில் பணிபுரியும் மருத்துவர்களை, இந்த திமுக அரசு நிரந்தரப் பணியிடத்தில் காட்டுகிறது.
அதுபோலவே, மற்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படிக்கும் PG மாணவர்கள் 3 மாதம் கட்டாய அரசு மருத்துவமனை பயிற்சி (பெரி பெரல் பயிற்சி) மாணவர்களையும் அரசு மருத்துவர்களாக கணக்கில் கொள்வது.
மாவட்ட சுகாதார சங்கம் (DHS) மற்றும் தேசிய நல்வாழ்வு திட்டம் (NHM) மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் பணியிடங்களையும், நிரந்தர மருத்துவப் பணியாளர்களாக கணக்கிடுகிறது விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு. மொத்தத்தில், இந்த திமுக ஆட்சியில், கடந்த 55 மாத காலமாக ஓரிரண்டு தேர்வுகளை மட்டுமே நடத்திவிட்டு, கும்பகர்ணத் தூக்கத்தில் உள்ளது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்.
`ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல், மொத்தத் துறையின் அவலங்களுக்கும் மேற்கண்டவை முத்தாய்ப்பாக உள்ளன. ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல்’ இந்த அதிமேதாவி பதவி வகிக்கும் துறையே, கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி காலியாக உள்ள 1100 மருத்துவர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விளம்பரம் செய்துள்ளது. தமிழகத்தின் மருத்துவத் துறை இந்த லட்சணத்தில் இருக்கும்போது, ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டுவிட்டது’ என்று சொல்வதுபோல, தன்னுடைய துறையை கவனிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் ‘மா. சுப்பிரமணியம் சார்’ தலைமையில் திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வரும் தேர்தலில் ஸ்டாலினின் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
எஞ்சியுள்ள 5 மாத ஆட்சிக் காலத்திலாவது அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று இந்த ஏமாற்று மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.