“அண்ணா, எம்ஜிஆர்போல் விஜய்யும் அதிசயமானவர்” - தவெக அருண்ராஜ் பேச்சு

அருண்ராஜ்

அருண்ராஜ்

Updated on
2 min read

திருச்செங்கோடு: “புகழ் பெற்றவர்கள் கொள்கை பேசுவது கிடையாது. கொள்கை பேசுபவர்கள் புகழ் பெற்றவர்கள் கிடையாது. அண்ணா, எம்ஜிஆர் போல் விஜய்யும் அதிசயமானவர்” என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேசினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பங்கேற்றுப் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தவுடன் அவரின் வயதை மற்றவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தனர். ஆனால் அவர் தவெகவில் இணைந்தவுடன் அவருக்கு 20 வயது குறைந்துவிட்டது. இதுபோன்ற இளைஞர் பட்டாளம் கூட யார் இருந்தாலும் 10, 15 வயது குறைந்துவிடும்.

நான் கடந்த 1997-ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தபோது பெருமைப்பட்டேன். 2-வது முறையாக யுபிஎஸ்சியில் ஐஆர்எஸ் அதிகாரியாக தேர்வானபோதும் பெருமைப்பட்டேன். ஆனால் அதைவிட பெருமை தவெகவில் உறுப்பினராக இணைந்தது தான்.

தவெக ஆரம்பிக்கப்பட்டபோது பாரம்பரியம் மிக்க இரு கட்சிகளை தாண்டி யாரும் வர முடியாது எனக் கூறினார். ஆனால், கட்சி தொடங்கி 2 ஆண்டுகளுக்குள்ளே தமிழகத்தின் முதன்மைக் கட்சியாக தவெக மாறியுள்ளது. தவெக ஆட்சி அமையும்போது அது உலகின் 8-வது அதியசமாக விளங்கும்.

தவெக தலைவர் விஜய்யை குடும்ப உறுப்பினர்களாக மக்கள் பார்க்கின்றனர். என் அண்ணன், தம்பி, என் மாமா எனப் பார்க்கின்றனர். மற்ற நடிகர்களைக் காட்டிலும் விஜய்யை மட்டும் தான் குடும்ப உறுப்பினராக பார்ப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். அண்ணா, எம்ஜிஆர் போல் தலைவர் விஜய்யும் அதிசயமானவர்.

நான் எங்கு போனாலும் நானும் தவெக உறுப்பினர் என கூறுகின்றனர். இது அன்பால் சேர்ந்த கூட்டம். இதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது சமூக நீதியை தூக்கிப் பிடித்தார். பெரியார், காமராஜர் ஆகியோரை உயர்த்திப்பிடித்தார். அப்போது நெஞ்சில் கை வைத்தவர்கள் இன்னும் வைத்துக் கொண்டுள்ளனர்.

புகழ் பெற்றவர்கள் கொள்கை பேசுவது கிடையாது. கொள்கை பேசுபவர்கள் புகழ் பெற்றவர்கள் கிடையாது. கொள்கை பற்று இருந்தால் மட்டும் தான் நாம் நீண்ட காலத்துக்கு பயணிக்க முடியும். நம் எதிரி திமுக. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என உழைக்கிறோம்.

ஒரு சாதாரண தொண்டனுக்கும் தவெக தலைவர் விஜய் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் நேரு என்ற அமைச்சர் ஒருவர் உள்ளார். ஆனால், அவர் பெயருக்கு நேர்மாறாக உள்ளார்.

அவர் துறையில் நடந்த ஊழல் தொடர்பாக விரிவாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக காவல் துறையினர் வழக்கு பதியாமல் தூங்கிக் கொண்டுள்ளது. குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி என்பது மட்டும் கிடையாது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாகவும் திமுக அரசு உள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சுத்தமாக கிடையாது. அதை சரி செய்ய முடியாத நிலையில் முதல்வர் உள்ளார். முதல்வருக்கு சினிமா பார்க்கவே நேரம் சரியாக உள்ளது.

ஆனால், காவல் துறையினர் ஒரு வேலையை சரியாக செய்கின்றனர். அது என்னவெனில் தவெக கூட்டம் நடக்கும் இடங்களில் காவல் துறையினர் 108 நிபந்தனைகள் விதிக்கும் வேலை தான்.

ஊடக சுதந்திரம் தமிழகத்தில் கிடையாது. பேச்சு சுதந்திரமும் கிடையாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. திமுக பாசிச கட்சி தான். ஈரோட்டில் தவெக கூட்டத்துக்கு 88 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு நிபந்தனைகள் விதித்தாலும் தவெக வெற்றியை தடுக்கவே இயலாது.

சேலத்தில் நான் பிறந்திருந்தாலும் திருச்செங்கோடு தான் எனது சொந்த ஊர். திருச்செங்கோடு அருகே உள்ள கோட்டப்பாளையம் சொந்த கிராமம். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களிலும் திருச்செங்கோடு வந்து சென்றுள்ளேன். திருச்செங்கோடு 2009-ம் ஆண்டு முதல் அப்படியே உள்ளது. பெரிய மாற்றம் இல்லை. தொழில் திறன் வாய்ந்த தொகுதியில் அரசு பெரியளவில் வளர்ச்சி செய்யவில்லை.

திருச்செங்கோட்டில் நிறைய பிரச்சினை உள்ளது. சுற்றுச்சாலை திட்டப்பணி முடியாமல் உள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. 4 ஆண்டு முடிவில் ரோப்கார் வசதி செய்வதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறுகிறார். தமிழகத்தில் 234 தொகுதியிலும் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அருண்ராஜ்</p></div>
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 9 பேர் காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in