

திண்டுக்கல்: எஸ்ஐஆர் பணியை முறையாக நடத்தாத மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் அவசரகோலத்தில் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அழைத்து வட்டாட்சியர் முத்துமுருகன், இனி இருக்கும் படிவங்களை, இடம்பெயர்ந்து விட்டார்கள் எனப் பதிவு செய்து முடியுங்கள் என்று வலியுறுத்துவதாக தகவல்கள் வருகிறது.
ஒட்டுப்பட்டியில் மொத்தம் 60 வாக்காளர்களை இடம்பெயர்ந்தாக பதிவு செய்துவிட்டார்கள். குறிப்பாக சின்னாளபட்டி பேரூராட்சியில் 25 ஆயிரம் வாக்குகள் உள்ளது. இதில் 7227 வாக்குகளை இடம்பெயர்வு என முடித்துவிட்டனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் 17 ஆயிரத்திக்கும் மேல் வாக்குககள் பதிவாகியுள்ளது. ஆனால் நேற்றுவரை 16100 வாக்காளர்கள் தான் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களையும் கட்டாயப்படுத்தி இடம்பெயர்ந்துவிட்டார்கள் என 25 ஆயிரம் வாக்குகளை இல்லாமல் செய்துவிட்டனர். இந்த அநீதி எங்காவது நடக்குமா, மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் திட்டமிட்டு ஆத்தூர் தொகுதியில் வாக்காளர்களை நீக்கிவிட்டனர்.
கடந்த இரண்டு தினங்களாக எஸ்ஐஆர் பணி ஆத்தூர் தொகுதியில் நடைபெறவில்லை. ஆத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வாரு வார்டிலும் 250-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை இடம்பெயர்ந்துள்ளனர் எனப் பதிவு செய்துள்ளனர். இவ்வளவு பெரிய தவறு தமிழகத்தில் எங்கும் நடத்திருக்காது.
தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து மறு சேர்க்கை நடத்தவேண்டும். மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது. சின்னாளபட்டி பேரூராட்சியில் 7713 பேரை நீக்கியுள்ளனர்.
எஸ்ஐஆர் பணியை முறையாக நடத்தாத மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். காலஅவகாசம் இருந்தபோதிலும் மாவட்ட ஆட்சியர் எஸ்ஐஆர் பணியை முடிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு சட்டத்திற்கு புறம்பாக அவசரகதியில் செயல்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.