

திண்டுக்கல்லில் தமிழக முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி அரங்கை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: “தமிழக அரசியல் கணிப்பு குறித்து அமித் ஷாவுக்குத் தெரியாது. அமித் ஷா 2029 பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதும் தமிழகத்தில் எதுவும் நடக்காது” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ஆம் தேதி திண்டுக்கல் வருகை தரவுள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதை திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: “திண்டுக்கல்லுக்கு வருகை தரும் முதல்வர் ரூ.1500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். பயனாளிகள் 30,000 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். ஒரு லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவுள்ளது.
தமிழக அரசியல் கணிப்பு குறித்து அமித் ஷாவுக்குத் தெரியாது. திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது என அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் மீண்டும் இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராவார். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதிமுக, பாஜக கூட்டணிக்கு யாரும் வரவில்லை. அந்தக் கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தான் வரும்.
கரூர் நிகழ்வுக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என நயினார் நாகேந்திரன் எப்படி சொல்கிறார்? இவர் ஆராய்ச்சி செய்தாரா? ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் தான் கொடுப்போம், பழைய ஓய்வூதியத்தைக் கொடுக்க முடியாது என அதிமுக கூறியது. நாங்கள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது அவர்களின் உரிமை. கோரிக்கைகளைக் கேட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப அதனை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். அனைவருக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக முதல்வருக்கு உள்ளது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஏமாற்ற மாட்டோம். அனைத்து அரசு ஊழியர்களும் திமுக பக்கம்தான் உள்ளனர். அனைத்து அரசு ஊழியர்களும் எங்களுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
அமித் ஷா 2029-ல் காலியாகி விடுவார். 2026-ல் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார். 2026-ல் திமுக ஆட்சி அமைவது உறுதி. அமித் ஷா 2029 பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதும் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. அப்போதும் திமுகதான் வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரஸ் அழிவுப் பாதையில் செல்வதாக ஜோதிமணி எம்.பி. கூறியது குறித்து எனக்கு தெரியாது” என்று கூறினார்.