Amit Shah

அமித் ஷா

படம்: ர.செல்வமுத்துகுமார்


திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா சிறப்பு வழிபாடு!

Published on

திருச்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருச்சி வருகை வந்தார். முதல்நாள் புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு விழாவில் பங்கேற்றார். மறுநாளான இன்று காலை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

திருவானைக்காவல் வடக்கு வாசல் வழியாக காலை 10 மணியளவில் கோயிலுக்கு வந்த அவரை இந்து சமய அறநிலைத் துறை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் வெள்ளி குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அம்மன் சன்னதியில் உள்ள பிரசன்ன விநாயகரை வழிபட்ட அமித் ஷா, மூலவர் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்தார். பேட்டரி கார் மூலம் மூன்றாம் பிரகாரம் வழியாக ஜம்புகேஸ்வரரை வழிபட்டார். உற்சவமூர்த்தி சன்னதியில் அமித் ஷாவுக்கு கோயில் பரிவட்டங்கள் கட்டப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

நினைவுப் பரிசுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ், கோயில் தலைமை அர்ச்சகர் கார்த்திகேயன், அத்தியாயன பட்டர் வாசுதேவன் ஆகியோர் வழங்கினர். கோயிலின் தல வரலாற்றை கோயில் ஓதுவர் சிவஜெகன் எடுத்துரைத்தார். அமித் ஷா வருகையையொட்டி சுமார் 2 மணி நேரம் கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தரிசனம் செய்துவிட்டு வெளிவந்த அமித் ஷாவை பார்த்ததுடன், அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் ‘பாரத் மாதா கி ஜே’, ‘வந்தே மாதரம்’ என தொடர்ந்து மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக முழக்கமிட்டனர். அவர்களைப் பார்த்து கையசைத்த அமித் ஷா பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்கள் இருக்குமிடத்துக்குச் சென்று நேரில் கைகுலுக்கி மகிழ்ந்தார்.

ஸ்ரீரங்கம் கோயில்: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக் கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் தாயார் சன்னதி வழியாக காலை 10.55 மணிக்கு உள்ளே நுழைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர், தீபு பட்டர் உள்ளிட்டோர் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவருடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன்சிங் மேக்வால், எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உடனிருந்தனர்.

முதலில் பெரிய பிராட்டி எனப்படும் தாயாரை அமித் ஷா வழிபட்டார். தொடர்ந்து சக்கரத்தாழ்வார், உடையவர் சன்னதியிலும் வழிபாடு நடத்திய அமித் ஷா, இறுதியாக பெரிய கருடாழ்வார், பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதரை தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு மாலை மரியாதையும், சால்வையும் அணிவிக்கப்பட்டு மூலவர் ரங்கநாதர் படமும் வழங்கப்பட்டது. ரங்கா ரங்கா கோபுரம் வழியாக வெளியே வந்த அமித் ஷா, அங்கிருந்து மோடி பொங்கல் விழா நடக்கும் மன்னார்புரத்துக்கு கிளம்பிச் சென்றார்.

தங்கப் பூரண கும்பம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு தங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக ரங்கநாதர் காப்பு கட்டி இருப்பதால் தங்கப் பூர்ண கும்ப மரியாதை அமித் ஷாவுக்கு வழங்கப்படவில்லை. மேலும், தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் அவதி: அமித் ஷா காலை 10.55 மணிக்கு கோயிலுக்கு வந்த நிலையில் காலை 8 மணிக்கெல்லாம் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், அவர்கள் அங்கிருந்த போலீஸாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Amit Shah
நியூயார்க் சிறையில் வெனிசுலா​ அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in