

சென்னை: ‘தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும்’ என்று அமைச்சர் காந்திராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2023-ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தவெக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தப்படுமா என கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜிடம் சென்னையில் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், ‘‘தவெக அரசு அமைந்த பிறகு கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்கள், மறைந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் மானியக் கோரிக்கை நிறைவுற்றவுடன் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த தேர்தல் வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படும்’’என்றார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் தேர்தல் மூலமாக சுமார் 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.