

கோப்புப் படம்
சென்னை: சீனா வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்துக்குடி இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமி (26). பட்டதாரியான இவர் உலகின் உயரமான 3 சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கெனவே ஐரோப்பாவின் உயரமான சிகரமான மவுன்ட் எல்ப்ரஸ் (5,642 மீட்டர்), தென் அமெரிக்காவின் உயரமான சிகரமான மவுன்ட் அக்கோன்காகுவா (6,961 மீ.), ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான மவுன்ட் கிளிமஞ்சாரோ (5,895 மீ.) ஆகியவற்றில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ள அவர், உலகின் 7 கண்டங்களின் மிக உயரமான சிகரங்களை தொடுவது என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலை ஏறுதல் பயிற்சி நிறுவனத்தில், மலைஏறுதல் பயிற்சியை முடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் வழியாக ஏறி சாதனை படைத்துள்ளனர்.
தற்போது, வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமி புதிய முயற்சியாக வரும் ஏப்ரல் 2-ம் தேதி சீனா வழியாகப் பயணித்து எவரெஸ்ட் சிகரத்தை அடையத் திட்டமிட்டுள்ளார்.
இந்த மலையேற்றப் பாதைவழியாக எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் முதல் தமிழக வீரர் என்ற பெருமை வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமிக்கு கிடைத்துள்ளது.
அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அழைத்துப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இளைஞர் வெங்கட சுப்பிரமணியன் நல்லசாமியின் புதிய சாதனை வெற்றிபெற வேண்டும், மேலும் அவர் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று அமைச்சர் வாழ்த்தினார்.