

சென்னை: பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்துவது குறித்து முதல்வருடன் இணைந்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் பால் விலை உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இது குறித்து திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் கேரள தனியார் நிறுவனம் ஒரு லிட்டர் ரூ.45.27-க்கும், ஹட்சன் ஆரோக்யா நிறுவனம் ரூ.42-க்கும் பாலை கொள்முதல் செய்கின்றன.
ஆவின் நிறுவனம் ரூ.41-க்கு தான் கொள்முதல் செய்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் பாலை விற்கின்றனர். ஆவினுக்கு பால் வருவது குறைந்துவிட்டது.
பால் உற்பத்தியாளர்களுக்கு தீவன விலை கட்டுபடியாகவில்லை. அதனால் அவர்கள் லிட்டருக்கு ரூ.45 கோரி போராட்டங்களை அறிவித்துள்ளனர். பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவினுக்கு அதிக பால் வருவதை உறுதிசெய்ய வேண்டும்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி: பால் உற்பத்தியாளர்கள் ஒரு லிட்டர் பசும்பால் ரூ.50 ஆகவும், எருமைப்பால் ரூ.60 ஆகவும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னர் அமைச்சர் சி.விஜயலட்சுமி அளித்த பதில்: 2021-ல் முந்தைய அரசு ஆவின் பால் பாக்கெட் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததால், ஆவின் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.220 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டது.
இதனால் பால் பொருட்கள் உற்பத்தியும், விற்பனையும் குறைந்து ஆவின் நிறுவனத்துக்கு மேலும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. ஆவின் கடுமையான நிதிச் சுமையை எதிர் கொண்டிருந்த நிலையிலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கொள்முதல் விலை ரூ.38-லிருந்து ரூ.41 ஆக ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது. தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வருடன் இணைந்து, ஆவின் நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பரிசீலித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.