

சென்னை: திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர்பொன்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் நல ஆணையர் சி.அ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தனிநபர் விபத்து நிவாரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம்.
ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டு வசதித்திட்டம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிர் இழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான உதவித் தொகை, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகை மற்றும் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: திமுக அரசு பொறுப்பேற்று கடந்த நான்கரை ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதியதாக 24 லட்சத்து 89 ஆயிரத்து 174 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். உறுப்பினர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நலவாரிய வாரியங்களின் செயலாளர்கள், மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், வட்டார தொழிலாளர் இணை ஆணையர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.