உணவில் உப்பின் அளவை குறைக்க விழிப்புணர்வு: சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்

உணவில் உப்பின் அளவை குறைக்க  விழிப்புணர்வு:  சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்
Updated on
2 min read

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்கள் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளன, மருத்துவச் சான்றளிக்கப்பட்ட இறப்புகளில் 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் நோய்களால் நிகழ்கிறது.

1.8 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தநோயுடன் வாழ்கின்றனர். இந்த நோய்களுக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலக சுகாதார நிறுவனம், ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால், ஆய்வுகளின்படி, தமிழக மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முதல் 8 கிராம் வரை உப்பு உட்கொள்கின்றனர்.

இதில் 88 சதவீதம், வீட்டுச் சமையலின்போது சேர்க்கப்படும் உப்பிலிருந்தே வருகிறது. ஒரு நாளைக்கு வெறும் 1 கிராம் உப்பு குறைந்தாலும், ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்து, இதய நோய் இறப்புகளில் 7 சதவீதமும், பக்கவாத இறப்புகளில் 10 சதவீதமும் குறையும்.

மேலும், சோடியம் குறைந்த மாற்று உப்பு பயன்படுத்திய சுமார் 21 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பக்கவாதம் 14 சதவீதமும், மொத்த இறப்புகள் 12 சதவீதமும் குறைந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த மாநில உத்தி ஒன்றை உருவாக்கி செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்களின் தற்போதைய உப்பு உட்கொள்ளல் அளவைக்

கண்டறிய, சிறுநீர் மாதிரி அடிப்படையிலான மாநில அளவிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

சுவையில் வேறுபாடு தெரியாத சோடியம் குறைந்த மாற்று உப்பை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு குறைப்பு குறித்த முறையான ஆலோசனை, சமூக சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடு தேடி வழங்கப்படும்.

ஊறுகாய், அப்பளம், கருவாடு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் மறைந்துள்ள உப்பு, வீட்டுச் சமையலில் அதிக உப்பு பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்கும் எளிய வழிமுறைகள் குறித்து மாநிலம் தழுவிய விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்படும்.

டெங்கு நோய் பாதிப்பு

டெங்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஒரு மாவட்டத்தில் சில வார்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வில், உடலில் தடவும் கொசு விரட்டி, எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற இயற்கை கொசு விரட்டி மற்றும் மின்சார கொசு விரட்டி ஆகியவற்றின் மூலம் டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கடியிலிருந்து கூடுதல் பாதுகாப்பு பெற முடியுமா மற்றும் இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்பது பற்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிவியல் ஆதாரங்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

உணவில் உப்பின் அளவை குறைக்க  விழிப்புணர்வு:  சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தமிழக இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி: அமைச்சர் தென்னரசு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in