

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் எண்ணிக்கை அதிகரித்தாலும், அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 6.31 லட்சம் பிரசவங்களை கையாள முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தால், மக்கள் அனைவருமே அரசு மருத்துவமனையை நோக்கி பிரசவத்துக்காக வருவார்கள்.
ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், கூடுதல் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்தி, மருத்துவ ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும் செய்யவில்லை.
என திமுக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் எழிலன் தெரிவித்துள்ளார். தமிழக பொது சுகாதார கட்டமைப்பானது, தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள், விரிவான நலத்திட்டங்களின் மூலமாக மகப்பேறு, குழந்தை நல் பராமரிப்பில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது, தமிழகத்தில் 2015-16 முதல் 2025-26-ம் ஆண்டு வரை நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக 2015-16-ம் ஆண்டு 9.47 லட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
இவற்றில் 6.31 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன. ஆனால், 2025-26-ம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கை 7.80 லட்சமாக குறைந்துள்ளது. இவற்றில் 4.15 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.
தமிழகத்தில் 2025-26-ம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இனிவரும் ஆண்டுகளில் சுமார் 6.31 லட்சம் பிரசவங்கள் வரை கையாளக்கூடிய திறன் அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளது என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடும்போது தெளிவாக தெரிய வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை கையாளத் தேவையான மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர குறைக்கப்படவில்லை. மேலும், 130 பிரத்தியேக சீமாங் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இவற்றில் ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடியில் மேம்பட்ட விரிவான அவசர்கால மகப்பேறு, குழந்தை பராமரிப்பு சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதை கையாள்வதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.