

கோப்புப்படம்
சென்னை: சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிவில், அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அசைவ உணவு விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சோதனை முறையில் தெருக்களில் ‘ஆரோக்கியமான சுகாதாரமான உணவு’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெருக்களில் உணவு கடை நடத்துபவர்கள் தரமான சுகாதாரமான உணவு தர வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உணவக பணியாளர்களுக்கு டைபாய்டு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். யூடிபூர்கள் ‘ஃபுட் ரிவ்யூ’ குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கான தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் அதிகரிக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வாயு கசிவால் இறந்தவர்களின் உடல்கள் அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணம் வாங்கினால், 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.