

ஈரோட்டில் வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நேற்று தொடங்கி வைத்தபின் சேலை ரகங்களை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஈரோடு: சென்னிமலை பகுதியில் தேக்கமடைந்துள்ள துணி இருப்புகளை அகற்றும் வகையில் தொடக்கநிலை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்யுமாறு கோ-ஆப் டெக்ஸ் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள வசந்தம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளியையொட்டி 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையை அமைச்சர் விஜய்பாலாஜி தொடங்கி வைத்தார். ஈரோடு ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் ஆனந்த்மோகன், சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பொதுமக்கள் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கும் வகையில் பவர்லூம் துணிகளின் விற்பனையை அதிகரிக்கவும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னிமலையில் தேக்கமடைந்துள்ள துணி இருப்புகளை அகற்றும் வகையில், தொடக்கநிலை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கூடுதல் துணிகளை கொள்முதல் செய்யுமாறு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் தமிழகத்தில் 10 புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் புதிய லினன் ரக துணிகள், கோரா பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
கரூர் ஜவுளிப் பூங்காவில் ஏற்றுமதிக்காக வீட்டு உபயோகத்துக்கான 1,000-க்கும் மேற்பட்ட வகையான ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.