

சென்னை: சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் சாதனைகள் படைத்த விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிதியுதவி வழங்கினார். சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு நிதியுதவியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இம்மாதம் நடைபெறவுள்ள பிரெஞ்சு பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டி, பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான பயண மற்றும் பயிற்சிச் செலவுகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் இந்நிதியுதவி வழங்கப்பட்டது.
மேலும், பாரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர் மனோஜ் குமாருக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல ஏதுவாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ.6,27,795 மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தையும் வழங்கினார்.
அதேபோல், ஹாங்காங்கில் மே மாதம் நடைபெற்ற ஆசிய யு 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் தமிழக அரசின், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களான ஜித்தின அர்ஜுனன் (ஆண்கள் நீளம் தாண்டுதல்), சாதனா ரவி (பெண்கள் மும்முறை தாண்டுதல்) மற்றும் பாவனா (பெண்கள் 4x100 தொடர் ஓட்டம்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், இவர்களுடன் ஆண்கள் 4x400 தொடர் ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரஞ்சித் குமாருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கினார்.
சீனாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய கடற்கரை சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் சைலிங் விளையாட்டு வீரர் சித்தரேஷ் நடேசன் உயர்தர உபகரணங்கள் வாங்குவதற்கு எலைட் திட்டத்தின் கீழ் ரூ. 4.65 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், பொது மேலாளர் எல்.சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.