

சென்னை: தமிழகத்தில் 2000 கிமீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் நேற்று, பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: சென்னை - கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும்.
சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகள் மேம்படுத்தல், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச்சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடல்வழி உயர்மட்ட சாலை
சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்டச் சாலைத் தொடர், மும்பை - நவிமும்பை கடல் இணைப்புச் சாலை போன்று கட்டம், கட்டமாக உருவாக்கப்படும்.
முதல்வரின் பாதுகாப்பான சாலைகள் இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்து டன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போக்குவரத்து விதிமீறல் கண்டறிதல், சாலை பாதுகாப்புப் பணிகள், நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்கள், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்படும்.
சாலைகளை சீரான முறையில் பராமரிக்க சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும். சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி இடையில் கடல்வழிப் பயணிகள் படகு போக்குவரத்துச் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். வடசென்னையில் வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.
பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும். சென்னை - திருத்தணி சாலையில் பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.
ஊரகச் சாலைகளை தரம் உயர்த்த ஆண்டுதோறும் 2,000 கி.மீ சாலைகளை மேம்படுத்த ரூ.2,550 கோடியில் ஊரகப்பகுதி சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை, ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ரூ.1000 கோடியில் 500 கி.மீ சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை சென்ட்ரல் - கத்திப்பாரா - கோயம்பேடு பகுதிகளை இணைக்கும் முக்கோண வழித்தடச் சாலைகள், பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலைகள் ரூ.400 கோடியில் மேம்படுத்தப் படும்.
சென்னை தொடக்க கிலோ மீட்டர் புள்ளியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் தொடக்கப் புள்ளியை குறிக்க நினைவுத்தூண் அமைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க தமிழ்நாடு நெடுஞ்சாலை பெருந்திட்டம் தயாரிக் கப்படும்.
ராமேசுவரம் அக்னித் தீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.
இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்த நாகப்பட்டினம், காங்கேசன் துறை இடையில் படகு போக்குவரத்துத் துறை சேவைகள் விரிவுபடுத்தப்படும்.
பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்கப்படும்.
ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனம், மாநிலத்தில் நடைபெறும் ரூ.200 கோடிக்கு மேற்பட்ட அரசு கட்டிடப் பணிகளை மேற்கொள்ள நிறுவப்படும் என்பது உட்பட 33 அறிவிப்பு களை வெளியிட்டார்.