

சென்னை: ‘திமுக ஆட்சியில் கட்டிய பாலம்தான் 3 மாதத்தில் இடிந்து போகிறது’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் மரிய வில்சன், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடிக்கு கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது” என்றார்.
திமுக உறுப்பினர் எ.வ.வேலு, “தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 54 ஆயிரம் கனஅடி தண்ணீரை தாங்கும் அளவுக்குத்தான் கட்டப்பட்டது. திருவண்ணாமலையில் பெய்த மழை மற்றும் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் என 3 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், தாங்கும் திறன் இல்லாமல், பாலத்தை அடித்துக்கொண்டு சென்றது. இயற்கை சீற்றத்தால் பாலம் உடைந்தது. இதற்கு கட்டிய பொறியாளர் மீது குறை சொல்ல முடியாது” என்றார்.
அப்போது பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 5 ஆண்டுகளாக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டு பணிகள் செய்துள்ளார். ஒவ்வொரு ரூபாய்க்கும் வெள்ளை அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வெள்ளை அறிக்கை முதல்வரின் கவனத்துக்கு சென்றபிறகு வெளியிடப்படும். அப்போது அந்த பாலத்தின் பிரச்சினை தெரியும்.
கல்லணை கட்டியது சோழர்கள் காலத்தில். அந்த பாலம் இன்னமும் எத்தனை மழை வந்தாலும் நன்றாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் கட்டிய பாலம்தான் 3 மாதத்தில் இடிந்து போகிறது. அதற்கு வெள்ளை அறிக்கையில் பதில் கிடைக்கும்” என்றார்.