

சென்னை: கனிம வளக் கடத்தலுக்கு திமுக அமைச்சர்கள் உடந்தையாக இருப்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குத் தங்கு தடையின்றி நடைபெறும் சட்டவிரோதக் கனிமவளக் கடத்தலைக் கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு தவறிவிட்டது. இந்தக் கனிமவளக் கடத்தல் தொடர்பாகப் பலமுறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கடத்தலுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களே ஆதரவாக இருக்கின்றனர்.
இதன்படி தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தமிழகத்தில் இருந்து கனிமங்கள் கடத்தப்படுகின்றன. இதனால் இயற்கை வளங்கள் அழிவதுடன், அப்பகுதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் திமுக நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கடையம் சந்திரசேகர் ராஜினாமா செய்துள்ளார். அவர் எடுத்துள்ள முடிவு சரியானது.
தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி அளவுக்கு கனிம கொள்ளை நடைபெறுகிறது. இதில் திமுகவுக்குப் பங்கு இருப்பதாக நான் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறேன். அவை உண்மை என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.