

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து, தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை பாதுகாக்கக் கோரியும், இத்திட்டத்தின் பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி செல்வப்பெருந்தகை பேசியதாவது:
பாஜகவின் சித்தாந்தமே மகாத்மா காந்தியின் பெயரை இந்திய தேசத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் ஓராயிரம் மோடி வந்தாலும் காந்தியின் பெயரை இந்தியாவின் மக்கள் மனதில் இருந்து அகற்றவே முடியாது. கரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்த திட்டம்தான் மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டமாகும். ஆனால் மத்திய மோடி அரசாங்கம் இந்தத் திட்டத்தை அகற்றி வருகிறது.
பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை முடித்த பிறகு, இறுதியாக பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறோம். அதில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.
இந்தப் போராட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி. செல்லக்குமார், எம்எல்ஏ துரை சந்திரசேகர், பொருளாளர் ரூபி மனோகரன், நடிகர் மன்சூர் அலிகான், கட்சியின் மாநில துணை தலைவர்கள் ஆ.கோபண்ணா, மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.