

சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, இனி ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பால் உற்பத்தி கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி ரூ.41 ஆக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கறவை மாடுகளுக்கான தீவனம் மற்றும் இதர இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
அதை பரிசீலனை செய்து, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் விதமாக கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44 ஆக வழங்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வால் மாதம் ரூ.60 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.720 கோடி செலவாகும். இந்த செலவினத்தை ஆவின் நிறுவனத்துக்கு அரசு ஈடுசெய்யும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.