தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக சூழ்ச்சி - பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக சூழ்ச்சி - பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

சென்னை: தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக சூழ்ச்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், இது தொடர்பாக முதல்வர் விஜய் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில், “சமீப காலமாக தென்னிந்தியாவின் அடையாளமாக திகழும் குறிப்பிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பரப்பப்பட்டு வரும் செய்திகள் தென்னிந்தியாவில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனங்களை அபகரிக்க உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் சதியாக இருக்குமோ..?

கார்ப்பரேட்டுகளின் சதிச் செயலுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும் (FSSAI) துணை போகிறதோ..? என்கிற பலத்த சந்தேகம் எழுவதோடு, இவ்விவகாரம் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் நம்பகத் தன்மையை சீர்குலைத்து, பாலுற்பத்தி மற்றும் பால் விநியோகத் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்னிந்தியாவின் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களின் வளர்ச்சியை சிதைத்து, ஒட்டுமொத்த பால் வளத்துறையை பாழாக்கி விடுமோ.. ? என்கிற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 10 மாதங்களுக்கு முன் ஆய்விற்காக எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் தரம் குறைந்திருந்தாக (கொழுப்பு சத்து மட்டும் குறைவு என்பதால் அது பயன்படுத்த தகுதியற்றது என்று அர்த்தம் இல்லை) தென்னிந்தியாவில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து அப்போதே நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் பரப்பப்படுவதை வைத்து பார்க்கும் போது இதன் பின்னால் பொதுமக்களின் மத்தியில் அந்நிறுவனங்களுக்குள்ள நற்பெயரை சிதைத்து, தனியார் பால் நிறுவனங்கள் மீது பொதுமக்களுக்கு அவ நம்பிக்கையை விதைத்து, அந்நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் வணிகத்தை அழித்து, அந்நிறுவனங்களை கைப்பற்ற உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூழ்ச்சி போல தெரிகிறது.

இந்த 21-ம் நூற்றாண்டில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளை விட பசுவின் பால் குடித்து, குறிப்பாக பாக்கெட் பால் குடித்து வளர்ந்தவர்களே அதிகம் என்கிற நிலையில், பாக்கெட் பால் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்து, தென்னிந்தியாவில் உள்ள தனியார் பால் நிறுவனங்களின் பால் வணிகத்தை அழிக்கத் துடிக்கும் கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்யை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக சூழ்ச்சி - பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in