

சென்னை: “ஓர் அரசியல்வாதியாகவும், கலாச்சார சின்னமாகவும், திரைப்படத் துறையிலும், அரசியலிலும் அழியாத ஓர் ஆளுமையாக எம்ஜிஆர் திகழ்ந்துள்ளார்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புகழ்பெற்ற எம்ஜிஆரின் பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்கிறேன். ஓர் அரசியல்வாதியாகவும், கலாச்சார சின்னமாகவும், திரைப்படத் துறையிலும், அரசியலிலும் அழியாத ஓர் ஆளுமையாக எம்ஜிஆர் திகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதன் மூலமும், மக்கள் நலனை உறுதி செய்ததன் மூலமும், அவர் எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்தவே முன்வந்துள்ளார்.
எம்ஜிஆர் தமிழ் சினிமா, கலாச்சாரம் மற்றும் பெருமையை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் தொடர்ந்து நம் இதயங்களில் வாழ்வார், மேலும் பல தலைமுறை இந்தியர்கள் இதயத்திலும் வீற்றிருப்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.