

புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படுபவர்கள் எல்லாரும் மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் பற்றிப் பேசுகிறார்கள். காரணம், எம்ஜிஆர் மக்கள் தலைவர். அவரது ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார்.
கருத்துச் சுதந்திரத்தை மதித்தார். விமர்சனங்களை வரவேற்றார். இதற்குக் காரணம் தம்மை நம்பி ஆட்சிப் பொறுப்பைத் தந்த தமிழக மக்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பதே!
நாட்டின் மீதான அக்கறை: தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழக்கும்போது அல்லது கடமைகளில் இருந்தோ பொறுப்புகளில் இருந்தோ விலகும்போது அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார்.
இதற்குத் ‘திரும்பப் பெறும் உரிமை’ (Right to Recall) என்று பெயர் வைத்தார். அதிமுகவின் அண்ணாயிசத்தில் இது ஒரு முக்கியக் கொள்கை என்றார். இதற்குக் காரணம் - பதவி போனால் பரவாயில்லை; ஆட்சி போனால் கவலை இல்லை; மக்கள் நன்மையே முக்கியம் என்கிற சிந்தனைதான்.
இதேபோல் நம் நாட்டின் முன்னேற்றம் ஒரு அடி முன் வைக்க இரண்டடி பின்னுக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் நாட்டின் பொருளாதாரத்தைத் தொற்றிக்கொண்டிருக்கின்ற கொடிய நோயாகிய கறுப்புப் பணம்தான். இதை ஒழிக்க, நூறு ரூபாய் நோட்டுக்களைச் செல்லாதவை என அறிவிக்க வேண்டும் என்பதை அண்ணாயிசக் கொள்கை மூலம் 1974இல் மத்திய அரசை வலியுறுத்தினார்.
கட்சிக்காரர்களை மதித்தவர்: நான் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியிருந்தாலும், அதிமுகவினர் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் எனச் சொன்னது, கட்சியின் பெயரில் ‘அகில இந்திய’ என்கிற வார்த்தைகளைச் சேர்த்தது பற்றி எல்லாம் எம்ஜிஆரைக் கடுமையாக விமர்சித்து அவரைவிட்டுப் பிரிந்தேன். அவர் என் மீது கோபப்படவில்லை. என்னை மீண்டும் கட்சியில் சேருமாறு அழைத்தார். பதவியும் தந்தார்.