

கோப்புப் படம்
சென்னை: சென்னை - மும்பை ஐபிஎல் போட்டியையொட்டி, ரசிகர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னையில் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எம்ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டி நாள் அன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் மா.போ.கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்துக்கும் மா.போ.கழக பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மா.போ.கழகம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் மாநகர பேருந்துகளில் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து வரலாம்.
மேலும், பல பேருந்துகளை பயன்படுத்தி மைதானத்துக்கு பயணம் செய்து வரலாம். மேலும், பார்வையாளர்கள் வசதிக்காக போட்டி முடிந்த பின்பு தமது இருப்பிடம் செல்ல, மாநகர போக்குவரத்துக் கழகம் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.