

கோப்புப் படம்
சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி பிரபல நகைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.18 கோடி மதிப்பு நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை பூக்கடை ஏழு கிணறு பகுதியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தில் சோதனை நடத்தினர்.
அதில் ரூ.18 கோடி மதிப்புள்ள சுமார் 12 கிலோ 760 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுதது, ஓட்டுநரான பரங்கிமலையைச் சேர்ந்த கிரண் (30) என்பவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருவதாகவும், பல்லாவரத்தில் இருந்து ராயபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் நகைகளை கொடுத்து விட்டுவேறு ஒரு கடைக்கு நகைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரிடம் அந்த நகைகளுக்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அதை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்றுச் செல்லும்படி வாகன ஓட்டுநரான கிரனுக்கு அறிவுரை வழங்கி அவரை பறக்கும்படையினர் அனுப்பி வைத்தனர்.