நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
Updated on
1 min read

சென்னை: கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இரண்டாம் கட்டமாக 116.1 கி.மீ. தூரத்துக்கு மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி பணிமனை, மாதவரம் சோழிங்க நல்லூர் ஆகிய மூன்று வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் சுமார் 26 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் 90 சதவீதத் தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துவிட்டன்.

எஞ்சியுள்ள தண்டவாளப் பணிகளை அடுத்த பத்து நாட்களுக்குள் முடித்துவிடத் திட்டமிடப்பட்டு வருவதாகவும், கோயம்பேடு நந்தம்பாக்கம் இடையே, வரும் நவம்பர் மாதத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கோயம்பேடு முதல் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம், வணிக ரீதியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படு வதற்கு முன்பு சுமார் 4 மாதங்கள் வரை நீடிக்கும்.

இந்தப் பாதையில் ஓட்டுநர் இல்லாத அதிநவீன ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மென்பொருள்கள் ரயில்களில் ஏற்கனவே நிறுவப்பட்டு, சோதனை ஓட்டங்கள் மூலம் போதிய இயக்க அனுபவமும் பெறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை அமைக்கும் பணிகளும் வரும் நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடையும்.

சென்னை வர்த்தக மையம் முதல் ஆலந்தூர் வரையிலான 3.6 கிலோ மீட்டர் பாதையானது வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த வழியாகச் செல்வதால், இதன் இணைப்புப் பணிகளை முடிப்பதற்கு மேலும் 45 முதல் 60 நாட்கள் வரை ஆகலாம். மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த பின்னரே சிக்னல் சோதனைகள் தொடங்கும் என்பதால், கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான முழு வழித்தடம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 34 பேர் பணியிடை நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in