மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

காங்கிரஸுக்கு எதிராக டெல்லியில் புயலைக் கிளப்ப திமுக வியூகம்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக எம்பி.க்கள் நாடாளுமன்றச் செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் புயலைக் கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில், கடந்த முறை கடும் எதிர்ப்பால் தள்ளிவைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதையடுத்து தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல், அயோத்தி ராமர் கோயில் நில மோசடி சர்ச்சை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசின் தொடர் தோல்விகள் மற்றும் சோனம் வாங்சுக் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எழுப்ப ‘இண்டியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதில் வழக்கம்போல திமுக தங்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பும் என காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் நம்பியிருந்தன.

அதிர்ச்சி கொடுத்த திமுக: இந்தச்சூழலில் சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் பட்சத்தில், அதில் உள்ள உள்ளடக்கங்களை நாங்கள் பரிசீலிப்போம். அது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நலனுக்கு எதிராக இருந்தால் மட்டுமே திமுக எதிர்க்கும். மாறாக, மத்திய அரசு எங்களது பரிந்துரைகளை ஏற்றிருந்தால் அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இது டெல்லி அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ‘மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் திமுக இணைந்து நிற்கும்’ என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் நம்பிக்கை தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்களுக்கு, மேகேதாட்டு விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி திமுக எம்பி.க்கள் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பினர்.இதுகுறித்து திமுகவின் எக்ஸ் பக்கத்தில், ‘‘நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.

காவிரி ஆற்றின் மீது கர்நாடக அரசால் முன்மொழியப்பட்டுள்ள மேகேதாட்டு அணை குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழகத்தின் மீதான அதன் தாக்கம் மற்றும் இதுதொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கொண்டு வர வேண்டும்’ என மக்களவை செயலருக்கு நாடாளுமன்ற திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை செயலருக்கு மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவாவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுக தலைவர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘மேகேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்ட வேண்டும்’ என முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் கசிந்தன. அதை உறுதி செய்யும் விதமாக தற்போது டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in