

தேனி: மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களை 3 பிரிவுகளாக வகைப்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதில் மலைப்பகுதியில் வீடு மட்டும் உள்ளவர் களுக்கு மாற்று வீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்கு நர் விவேக்குமார் பிரசாத் பி. யாதவ் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட விவசாயி களுக்கான வனத்துறை குறை தீர்க்கும் கூட்டம் வில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது. துணை இயக்குநர் (வில்லிப் புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக்குமார் பிரசாத் பி.யாதவ் தலைமை வகிக்க, மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன்: தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான கரடில் நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களை வெளியேற்ற வனத்துறை நோட்டீஸ் கொடுத் துள்ளது.
இது வனஉரிமை சட்டத்துக்கு எதிரானது. இங்கிலாந்து ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் வனத்துறை 2006-ம் ஆண்டு வனஉரிமை சட்டத்தை கண்டுகொள்வதில்லை.
தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன்: கடந்த 2015-ம் ஆண்டு மலைக் கிராமங்களில் தமிழ்நாடு எஸ்டேட் ஒழிப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என அன்றைய ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டு, அக்கடிதம் முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுப்பப் பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. மேகமலை, அகமலை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத்: மேகமலை வனப்பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர் களை வெளியேற்றும் முடிவு சரியல்ல. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
மலை மாடு வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி: வனஉரிமை சட்டப்படி மாடுகள் மேய்க்க உரிமை உண்டு. ஜமீன் காலம் முதல் 4 தலைமுறைகளாக பட்டி பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் சதீஸ் பாபு,ஜெயபால்: பன்றியை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். கூடலூர் பளியங்குடி பகுதிகளில் காட்டு யானையால் வாழை, தென்னை விவசாயம் பாதிக்கப் படுகிறது.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் துணை இயக்குநர் விவேக்குமார் பிரசாத் பி. யாதவ் கூறியதாவது: வன ஆக்கிர மிப்பாளர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். வன நிலத்தில் வீடு மட்டும் உள்ள வர்கள்.
வீட்டுடன் வனநிலத்தை ஆக்கிரமித்தவர்கள், மலைப் பகுதிக்கு வெளியே வாழ்ந்து கொண்டு வனநிலத்தை ஆக்கிர மித்து விவசாயம் செய்பவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் நட வடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வீடு மட்டும் உள்ள முதல் பிரிவினருக்கு மாற்று வீடு உள்ளிட்ட வாழ்வாதாரம் ஏற் படுத்தித் தரப்படும். மற்றவர்களை வெளியேற்றுவதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேகமலை வனப்பகுதியில் பட்டா வைத்துள்ளவர் கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.