

தென்காசி: தென்காசி மாவட்ட மதிமுக அலுவலக பூட்டை உடைத்து பொருட்களைத் திருடியதாக, கடையநல்லூர் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், கடையநல்லூர் தொகுதியில் மதிமுகவைச் சேர்ந்த தி.மு.ராசேந்திரன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதுடன், தவெகவுக்கு ஆதரவளித்தது. ஆனால், கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்க மறுத்த தி.மு.ராசேந்திரன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய மறுத்து, பதவியில் நீடிக்கிறார். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் மதிமுக மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அத்துமீறி நுழைந்து கட்சிக்கு சொந்தமான பொருட்கள் திருடிச் செல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக கடையநல்லூர் சட்டப்பேரவை
உறுப்பினர் தி.மு.ராசேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மதிமுக தென்காசி மாவட்டப் பொருளாளர் அ.சுப்பையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கடந்த 13-ம் தேதி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, வேறு பூட்டு மாற்றப்பட்டிருந்தது. மேலும் அங்கிருந்த, வைகோ, அண்ணா, பெரியார் படங்கள், பிளாக்ஸ் போர்டு, கொடிக்கம்பம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருந்தன. இப்பொருட்களை கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் தி.மு.ராசேந்திரன் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. எனவே, அவர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.