

வைகோ
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவரிடம் ஒரு வாக்குக் கொடுத்தேன். அதை மீறக்கூடாது என்பதால் திமுக பக்கம் நிற்கிறோம். தொகுதிகள் குறைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டார். அதில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டும். கல்விக்கடன்களை ரத்து செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து அரசிடம் வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: பாலியல் குற்றங்கள் அனைத்துக் காலங்களிலும் நடந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவை குறைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு காரணமே போதைப்பொருள் கலாசாரம் தான். அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை வெளியே வர முடியாத அளவுக்கு தண்டிக்க ஏதுவாக சட்டம் கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் சிலர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவரிடம் ஒரு வாக்குக் கொடுத்தேன். கொடுத்த வாக்கை மீறக்கூடாது. அதனால் திமுக பக்கம் நிற்கிறோம். தொகுதிகள் குறைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.
எங்கள் தொண்டர்கள் தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள். மற்ற கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. மதிமுக செறிவூட்டப்பட்ட திராவிட இயக்கம். மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றுவதை தடுப்பதே எங்கள் இலக்கு.
விஜய் குறித்து பல கருத்துக்கணிப்புகள் வருகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது அவரின் நிலை என்ன என்பது தெரியும். பல கணிப்புகளை தேர்தல் முடிவுகள் தவிடுபொடியாக்கியுள்ளன. விஜய் செல்லும் இடங்களில் அவருக்கு நல்ல கூட்டம் கூடுகிறது. ஆனால், அவர் எப்படிப் பேசுகிறார், என்ன பேசுகிறார், எப்படிச் செயல்படுகிறார் என்று நான் விமர்சிக்க விரும்பவில்லை.
ரஜினிகாந்தை திமுக மிரட்டியது என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது. ரஜினிகாந்த் மிகவும் தைரியமான நேர்மையான நபர். யார் மிரட்டலுக்கும் அஞ்சக்கூடியவர் அவர் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.