

மதுரை: தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: துறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதாரத் திட்டத்தின்கீழ் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். அரசு ஊழியரான எனக்கு மகப்பேறுக்காக 270 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இருப்பினும், எனக்கு 270 நாட்கள் விடுமுறை வழங்கவில்லை.
எனவே அரசு ஊழியர் மகப்பேறு விடுமுறை தொடர்பான அரசாணை அடிப்படையில் விடுமுறை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இம்மனுவை தனி நீதிபதி விசாரித்து, எனக்கு 270 நாட்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுகாதாரத் துறை செயலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.அப்போது அரசு தரப்பில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் 6 மாதம் விடுப்பு தர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கைமுடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.