

சென்னை: வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சினைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி தேவைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் தொகுதி வளம், வளர்ச்சிக்கான மக்கள் கூடுகை, பெரம்பூர் கண்ணதாசன் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் பெரம்பூர் தொகுதி மக்கள் வளர்ச்சிக்காக தயார் செய்யப்பட்ட மாஸ்டர் பிளான் அறிக்கையை கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் வெளியிட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா பெற்றுக்கொண்டார்.
இந்த அறிக்கையில், கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை அரசு கைவிட்டு, பசுமை சென்னைக்கான முன்னெடுப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மீட்கப்படும் 352 ஏக்கர் நிலத்தை வடசென்னையின் நூலகம், பூங்கா வசதிகளுடன் புதிய வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும்.
வண்ணாரப்பேட்டை முதல் செங்குன்றம் வரை புதிய மெட்ரோ வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும். பேசின் பிரிட்ஜ் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும்.
மூலக்கடை - பெரம்பூர் இடையே மாதவரம் நெடுஞ்சாலை அகலப்படுத்த வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்காக முழுமையாக ஆய்வு செய்து, நவீன முறையில் மறுகட்டமைக்க வேண்டும். மழைநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
ஒருங்கிணைந்த பெரம்பூர் வெள்ள பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். விடுபட்ட தகுதியான குடியிருப்புகளுக்கு குடிமனை பட்டாக்களை வழங்க வேண்டும் என்பட உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
முன்னதாக, கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் பேசும்போது, “கால்பந்து வீரர்களின் விளையாட்டு களமாக இருந்ததால் வியாசர்பாடி பகுதி குட்டி பிரேசில் என்று அழைக்கப்பட்டது. இன்று க்ரைம் ஏரியா என்று முத்திரை குத்தப்படுகிறது.
கல்வி, அறிவியல், தொழிலில் சிறப்பான முத்திரையை பெரம்பூர் தொகுதி பதிக்க வேண்டும். பெரம்பூர் தொகுதியின் முகத்தோற்றம் மாற வேண்டும். அதற்கு இந்த மாஸ்டர் பிளானை அரசு அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.