

சென்னை: அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த உன்னத தமிழகத்தை உருவாக்குவோம் என்று காவலர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன, அமைப்பு ரீதியான காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் செப்.6-ம் தேதி (நேற்று) காவலர் தினம் கொண்டாடப்படுகிறது.
சமூகத்தில் அமைதி நிலவவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றி பணியாற்றிவரும் காவல் துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் தின நல்வாழ்த்துகள்.
குற்றங்களைத் தடுத்து, சட்டம் - ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்கள், பேரிடர் காலங்களில் மக்களின் உயிர், உடைமை, உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல் துறையினரின் வீரமும், தியாகமும் போற்றத்தக்கவை.
காவல் துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களது பணித் திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் அரசு முன்னுரிமை அளிக்கும்.
மக்களும், காவல் துறையுடன் கரம் சேர்த்து, நம்பிக்கை, நல்லிணக்கத்துடன் பயணித்து, அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த உன்னத தமிழகத்தை உருவாக்க, இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.