

சென்னை: “மதுரை மேலூரில் ஆன்லைன் செயலி மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடுகள் பெறப்பட்டு பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாக கண்டறிய வேண்டும்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாக கண்டறிய வேண்டும்.
இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டப்படி கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தச் சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் மட்டுமே தொடர்புடையதா அல்லது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வெவ்வேறு செயலிகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றனவா என்பதையும் அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ள இணையவழி மற்றும் முதலீட்டு மோசடி புகார்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஒரே மாதிரியான செயல்முறைகள், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் முகவர் வலையமைப்புகள் ஏதேனும் தொடர்புடையவையா என்பதை புலனாய்வு செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வங்கிக் கணக்குகள், சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கண்டறியப்படும் சொத்துகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை சட்டப்படி உடனடியாக முடக்கி, மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமிருந்தும் முறையாக புகார் பெற்று, அவர்களின் பண இழப்பு குறித்த முழுமையான ஆவணங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்க வேண்டும். எளிய மக்களின் பல ஆண்டுகால உழைப்பையும் சேமிப்பையும் ஆசை வார்த்தைகளைக் கூறி சுரண்டும் இத்தகைய இணையவழி மற்றும் முதலீட்டு மோசடிகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.
மேலூர் FQL மோசடி தொடர்பாக உண்மையான இழப்புத் தொகை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மோசடியில் ஈடுபட்டவர்களின் முழு வலையமைப்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.' எனத் தெரிவித்துள்ளார்.