

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மலைக்கிராம மக்கள்.
தேனி: புலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடாது. இதுகுறித்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்துக்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 98 மலைக் கிராமங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அங்குள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதிகளில் விவசாயப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்து, மலைக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தேனி ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி,மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தேனி ஆட்சியரிடம் மனு அளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்க தலைவர் டில்லிபாபு. உடன் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. உள்ளிட்டோர்.
இதில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது, மலைக்கிராம மக்களை வெளியேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். வன உரிமைச் சட்டப்படி அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதுவரை அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. வனத்துக்குள் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் பேசும்போது, ‘மலைவாழ் மக்களை வெளியேற்றக் கூடாது. மீறிவெளியேற்றினால் எனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வேன்’ என்றார். இதில் திமுக, அதிமுக, அமமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலந்துகொண்டன. போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியர் இரா.வைத்திநாதனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வனக்கிராம மக்களின் போராட்டத்தால், தேனி - மதுரை சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.