

சென்னை: வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கண்டித்து உலக நாடுகள் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெனிசுலா போதைப் பொருள் மையம் என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் தாக்குதல் ஒரு சட்டவிரோத அடாவடி தாக்குதல் மட்டுமல்ல, அந்த நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு மிதிக்கும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது இணையர் சீலியா ஃப்ளோரஸ் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பதும் கண்டனத்துக்குரியது. வெனிசுலா உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் வளம் கொண்ட நாடு என்ற பின்னணியில் இந்த ஆக்கிரமிப்பு, அமெரிக்காவின் கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகிற அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும்.
மேலும் வெனிசுலாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோ, கொலம்பியா ஜாக்கிரதை என டிரம்ப் அறிவித்திருப்பது, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்பதற்கான எச்சரிக்கையாகவே உள்ளது. இவற்றை கண்டித்து உலக நாடுகள் அனைத்தும் உரக்க குரல் எழுப்ப வேண்டும். வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக்கள் சாத்தியமான இடங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதிபர் டிரம்ப்பின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.